மனஅழுத்தம் இல்லாமல் பணியாற்றுவது எப்படி? போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சி
மனஅழுத்தம் இல்லாமல் பணியாற்றுவது எப்படி? என்று திண்டுக்கல்லில் போலீசாருக்கு 3 நாட்கள் பயிற்சிஅளிக்கப்படுகிறது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் சமீபகாலமாக போலீசார் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இதை தவிர்த்து மனஅழுத்தம் இல்லாமல் பணியாற்றுவது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள், 4 மனநல மருத்துவர்கள், உளவியல் ஆலோசகர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு பெங்களூருவில் 5 நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கு மனஅழுத்தத்தை போக்கும் வகையில் நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த போலீசாருக்கு, சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் நேற்று பயிற்சி தொடங்கியது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் தலைமை தாங்கி பேசினார்.
திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷிநிர்மல்குமார் குத்துவிளக்கேற்றி பயிற்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி, துணை சூப்பிரண்டுகள் மணிமாறன், ஆனந்தராஜ், மோகன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் என 35 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் ஜாஸ்மின்மும்தாஜ், முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரஞ்சித்குமார், ரமேஷ்ராஜா மற்றும் மனநல மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர்.
அப்போது எந்த சூழலிலும் மனஅழுத்தம் இல்லாமல் பணியாற்றுவது எப்படி? என்று பயிற்சி அளித்தனர். இதற்காக பணியில் சந்திக்கும் பிரச்சினைகளை உடன் பணியாற்றும் நபர்கள் அல்லது உயர் அதிகாரிகளிடம் கூற வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களிடம் மனம்விட்டு கலகலப்பாக பேச வேண்டும். இதன்மூலம் மனஅழுத்தம் குறைந்து மனம் இயல்பாகும். மனஅழுத்தத்துக்கு நாமே காரணம், எனவே அதை நம்மால் தீர்க்க முடியும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினர்.
மேலும் போலீசாரை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்கு பலுன் உடைத்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட சிறுசிறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 35 பேருக்கும் மொத்தம் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இறுதி நாளில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க உள்ளனர். அப்போது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் வாரந்தோறும் 35 பேர் வீதம் என அனைத்து போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.