மேற்கு மண்டல எல்லை பகுதிகளில்: மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை - போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா பேட்டி

மேற்கு மண்டல எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை என்று போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா கூறினார்.

Update: 2018-11-30 22:15 GMT
கோவை,

கோவை மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பது தொடர்பான நிறை வாழ்வு பயிற்சி முகாம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பயிற்சியை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா தொடங்கிவைத்து கையேடுகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என அனைத்து தரப்பினருக்கும் பயிற்சி அளிக்கப்படும். போலீசாரின் மன இறுக்கத்தை போக்கினால் தான் பொதுமக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்ய முடியும். கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 1,500 போலீசாருக்கும் பயிற்சி அளிக்கப்படும். வாரம் 40 பேர் வீதம் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படும்.

மேற்கு மண்டலத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகள் 2 சதவீதம் குறைந்து உள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 சதவீதம் குறைந்து உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் விபத்துகள் குறைவான மாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடிக்க கோவை மாவட்டத்துக்கு வாய்ப்பு உள்ளது.

மேற்கு மண்டலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எல்லை பகுதியில் சந்தேகப்படும்படி யாராவது வந்தால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு மலைவாழ் மக்களிடம் தெரிவித்து உள்ளோம். அவர்களும் தகவல்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேற்கு மண்டலத்துக்குட்பட்ட எல்லை பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை. ஆனாலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகிறோம். இதற்காக நக்சலைட்டு தடுப்பு பிரிவு போலீசார் 10 குழுக்களாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். தேவைப்பட்டால் அதிரடிப்படை போலீசாரையும், ஆயுதப்படை போலீசாரையும் அனுப்ப தயாராக உள்ளோம்.

மேற்கு மண்டலத்தில் போலீசாருக்கு தேவையான விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களின் பிறந்தநாள், திருமண நாளன்று கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டு போலீஸ் சூப்பிரண்டின் வாழ்த்து மடல் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது டி.ஐ.ஜி. கார்த்திகேயன், கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு முத்தரசு ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்