மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது தாக்குதல்; வாகனங்கள் உடைப்பு அண்ணன்- தம்பி உள்பட 13 பேர் மீது வழக்கு

கொரடாச்சேரி அருகே புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டனர். மேலும் வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-11-30 22:30 GMT

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வடுகக்குடி, கமலாபுரம் பகுதியில் கஜா புயலில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியில் திருவாரூர், கொரடாச்சேரி மற்றும் வெளி மாவட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகளை வீடுகள் இருக்கும் பகுதியில் பயன்படுத்தாமல் வேறு பகுதியில் பயன்படுத்த வேண்டும் என அப்பகுதியில் உள்ள சிலர் கூறினர்.

அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கும், அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கிராமத்தினர் சிலர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்களை தரக்குறைவாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பராமரிப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். அப்போது மின்வாரிய ஊழியர்களும் சிலரை தாக்கினர். இதில் இரு தரப்பை சேர்ந்த 6 பேர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து திருவாரூர் மின்சார வாரிய உதவி பொறியாளர் உமா கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வடுகக்குடி கிராமத்தை சேர்ந்த கோகுல் (வயது 26), செந்தில்குமார் (24), இவருடைய அண்ணன் சரவணன் (30), பிரசாந்த் (30), மாதவன் (29), தமிழ்ச்செல்வன் (32), சதீஷ் (26), மணிகண்டன் (29), தமிழ்வாணன்(28), தேவேந்திரன்(32) ஆகிய 10 பேர் மீது கொரடாச்சேரி போலீசார் கொலைமிரட்டல், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைப்போல ஊர் மக்கள் சார்பில் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் மின் ஊழியர்கள் பழவனக்குடியை சேர்ந்த வினோத்குமார் (33), மாவூரை சேர்ந்த ஜானகிராமன் (20), திருநெல்லிக்காவலை சேர்ந்த மார்க்ஸ் (24) ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்