பெண் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு முகாம் சட்டப்பணிகள் ஆணைக்குழு நடத்தியது

சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் மற்றும் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு ஹோவர்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

Update: 2018-11-30 22:15 GMT
சென்னை,

சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி ஐ.ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, குழந்தைகளுக்கான அடிப்படை சட்டங்கள் என்ன? குழந்தை தொழிலாளர் சட்டம் என்ன சொல்கிறது? நல்ல எண்ணத்திலான தொடுதல், தீய எண்ணத்திலான தொடுதலை எப்படி வேறுபடுத்தி உணரவேண்டும்? போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கி பேசினார்.

மேலும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்கவேண்டும் என்றும், மாணவிகள் கல்வியை திறம்பட படித்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதேபோல குற்ற வழக்கு தொடர்பு இயக்ககத்தின் இயக்குனர் டி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி, தபால்நிலையங்களின் மூத்த கண்காணிப்பாளர் (சென்னை நகரம் மத்திய கோட்டம்) அலோக் ஓஜா, அரசு ஹோவர்ட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயகுமாரி முரளிதரன், பாதுகாப்பு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோரும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி குறித்து பேசினார்கள். இந்த முகாமில் மாணவிகளின் பெற்றோரும் கலந்துகொண்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்று கையொப்பம் இட்டனர்.

மேலும் செய்திகள்