மகா தீபத்தின் போது துணிப்பை கொண்டு வந்தவர்களுக்கு தங்க, வெள்ளி நாணயம் கலெக்டர் வழங்கி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மகாதீபத்தின் போது சணல் பை, துணிப்பை கொண்டு வந்தவர்களுக்கு, தங்க, வெள்ளி நாணயத்தை கலெக்டர் கந்தசாமி வழங்கி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தமிழக அரசு அடுத்த மாதம் (ஜனவரி) 1-ந் தேதி முதல் தடை செய்துள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பை, சணல் பை அல்லது சுற்றுச்சுழலுக்கு உகந்த பைகளை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டும் இத்திட்டத்தினை மாசு கட்டுப்பாட்டு வாரியமும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் செயல்படுத்தியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்தனர்.
மகா தீபத்தின் போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் துணிப்பை, சணல் பை மற்றும் சுற்றுச் சுழலுக்கு உகந்த பைகளை எடுத்து வருவோருக்கு தங்க நாணயம், வெள்ளி நாணயம் வழங்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் கடந்த 22-ந் தேதி மாலை 6 மணி முதல் 23-ந் தேதி மாலை 6 மணி வரை முகாம் அமைக்கப்பட்டு 30 ஆயிரம் பேருக்கு வெள்ளி நாணயம், தங்க நாணயம் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இவர்களில் குலுக்கல் முறையில் வெள்ளி நாணயத்திற்கு 72 நபர்களும், தங்க நாணயத்திற்கு 6 நபர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகத்தில் கலெக்டர் கந்தசாமி தங்க நாணயம் வழங்கி தொடங்கி வைத்தார். மாசுகட்டுபாட்டு வாரிய சுற்று சூழல் பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சுகாஷினி, அக்பர்ஷெரீப் ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களுக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் மூலம் தங்க, வெள்ளி நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.