துணை போலீஸ் சூப்பிரண்டு தொடர்புடைய செம்மரக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி 3 ஆண்டுகளுக்கு பின் கைது பெங்களூரு விமான நிலையத்தில் போலீசார் மடக்கினர்

ஆம்பூர் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு தொடர்புடைய செம்மரக் கடத்தல் வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். டெல்லியில் இருந்து பெங்களூரு வந்தபோது விமான நிலையத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2018-11-30 22:45 GMT

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பாலூர் கிராமத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் கடந்த 2015–ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வேலூர் மதுவிலக்குப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த தங்கவேல், பா.ம.க. பிரமுகர் சின்னபையனை மிரட்டி 7 டன் செம்மரங்களை அள்ளிச்சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேலூரை சேர்ந்த நாகேந்திரன் என்பவரும், அவருடைய மனைவியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த அமித்கான் (வயது 65) என்பவர் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவர் துணைபோலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுடன் சேர்ந்து செம்மரங்களை பெங்களூருவுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.

அவரை போலீசார் தேடுவதை அறிந்ததும் தலைமறைவாகி விட்டார். அவர் கடந்த 3 ஆண்டுகளாக எங்கிருக்கிறார் என்பது போலீசாருக்கு தெரியாமல் இருந்தது. ஆனாலும் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல் தலைமையிலான போலீசார், அமித்கான் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரால் 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அமித்கான் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வருவதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வஜ்ரவேல் தலைமையில் போலீசார் பெங்களூரு விமான நிலையத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது விமானத்தில் இருந்து இறங்கி வந்த அமித்கானை அங்கேயே மடக்கிபிடித்து கைது செய்து வேலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3–ல் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர்.

மேலும் செய்திகள்