தூத்துக்குடி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் நடந்தது.
நேர்காணல்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி) கீழ், பயனாளிகளை தேர்வு செய்யும், மாவட்ட அளவிலான 4–வது தேர்வுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கூட்டத்தில், சுயதொழில் தொடங்க கடன் உதவி கேட்டு நகர்ப்புறம் மற்றும் கிராம பகுதிகளில் விண்ணப்பம் செய்த நபர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:–
மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் 2018–19–ம் நிதியாண்டிற்கு 96 நபர்கள் சுயதொழில்கள் தொடங்க ரூ.2 கோடியே 19 லட்சம் மானியமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் மாவட்ட அளவிலான 4–வது தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட 64 விண்ணப்பங்கள், மதுரை கதர் கிராமத்தொழில் ஆணையம் மூலம் பெறப்பட்ட 10 விண்ணப்பங்கள், நெல்லை கதர் கிராமத்தொழில்கள் வாரியம் மூலம் பெறப்பட்ட 12 விண்ணப்பங்கள் என மொத்தம் 86 விண்ணப்பங்கள் நேர்முக தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பங்களை வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
86 நபர்களின் திட்ட மதிப்பீடு ரூ.2.54 கோடி. இதில் 35 சதவீதம் மானியமாக ரூ.82.04 லட்சம் வங்கி கடன் அனுமதிக்கப்பட்டதும் விடுவிக்கப்படும். தொடர்ந்து விண்ணப்பிக்கும் நபர்களும் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழில் முனைவோர் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய கடன் பெற www.kviconline.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் அனு (பயிற்சி), மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், திட்ட மேலாளர் சுவர்ணலதா, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.