திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள: குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் கூறிய புகாரை தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் சென்று ஆய்வு செய்தார்.

Update: 2018-11-29 22:00 GMT
நல்லூர், 

திருப்பூர் 2-ம் குடிநீர் திட்டத்தின் கீழ் மேட்டுப்பாளையத்தில் இருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் தரை மட்ட குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. அதன்படி இந்த தொட்டிகளில் இருந்து நல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட 41, 42 ஆகியவார்டுகள் அடங்கிய பகுதிகளுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தரை மட்ட குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து அந்தபகு தியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது “இந்த தொட்டியை மாதம் தோறும் சுத்தம் செய்வதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதற்கான காரணம் கேட்டால் சொல்ல மறுக்கிறார்கள். என்றனர்.

பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் நேற்று அந்த பகுதிக்கு சென்று குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள தரை மட்ட தொட்டி பராமரிப்பு இன்றி மூடி வைக்காமல்இருப்பதையும், தொட்டியில் கசிவு இருப்பதையும் கண்டு பிடித்து அதை சரிசெய்ய உத்தரவிட்டார். மேலும் துர்நாற்றம் வீசுவதற்கு என்ன காரணம் என்று ஊழியர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் தொட்டியை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து தரை மட்ட குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீரை அலுவலர்கள் வெளியேற்றினார்கள். ஆய்வின் போது, உதவி ஆணையாளர் கண்ணையன், பொறியாளர் சவுரிசங்கர், குழாய் ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்