கடல் சீற்றத்தால்: கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
கடலூரில் கடல் சீற்றத்தால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து சிங்காரத்தோப்பு, அக்கரைகோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, சொத்திக்குப்பம், தேவனாம்பட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் 100-க்கும் மேற்பட்ட பைபர் மற்றும் விசை படகுகளில் தினமும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் வியட்நாம், தாய்லாந்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், அது மேற்கு நோக்கி நகர்ந்து கஜா புயல் உருவான அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. அதனால் 2 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பினர். இதற்கிடையே நேற்று அதிகாலை 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க புறப்பட்டனர். அப்போது முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றம் அதிகளவில் இருந்ததால், அவர்களால் கடலுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவர்கள் உடனே கரைக்கு திரும்பினர். மேலும் பெரும்பாலான விசை படகு மற்றும் பைபர் படகு மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்திலும், கடற்கரையோரத்திலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர்.
மீன்கள் வரத்து இல்லாததால் துறைமுக பகுதி ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடலூர் தாழங்குடா கடற்கரையில் இருந்து பைபர் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. அவர்களும் தங்கள் படகுகளை கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு 40-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள் மட்டும் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.