வருகிற 10-ந் தேதி 1 லட்சம் விவசாயிகளை திரட்டி பெலகாவியில் ஆர்ப்பாட்டம் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு

வருகிற 10-ந் தேதி 1 லட்சம் விவசாயிகளை திரட்டி பெலகாவியில் ஆர்ப்பாட்டம் நடத்த கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Update: 2018-11-29 23:52 GMT
பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதன் தலைவர் எடியூரப்பா தலைமையில் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் அனந்தகுமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகஜினகி, மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாசபூஜாரி, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதல்-மந்திரிகள் ஈசுவரப்பா, ஆர்.அசோக், பிரகலாத்ஜோஷி எம்.பி. மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பெலகாவியில் நடைபெற உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. வருகிற 10-ந் தேதி 1 லட்சம் விவசாயிகளை திரட்டி பெலகாவியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வருகிற 10-ந் தேதி 1 லட்சம் விவசாயிகளை சேர்த்து, பெலகாவியில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பது உள்பட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும்.

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதையடுத்து எங்கள் கட்சி சார்பில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை இந்த ஆய்வு பணி நடைபெறும். இந்த குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து கொள்வோம். அதன் அடிப்படையில் அறிக்கையை தயாரித்து மத்திய-மாநில அரசுகளிடம் தாக்கல் செய்வோம்.

இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். ஆளும் அரசு பண பலத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றது. எங்கள் கட்சியிலும் சில தவறுகள் நடந்துவிட்டன. இந்த தவறுகளை சரிசெய்து, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடிவு செய்துள்ளோம்.

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். குடகு மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் அந்த நிதியை மாநில அரசு இதுவரை பயன்படுத்தவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில அரசு எந்த நிவாரண பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இன்போசிஸ் அறக்கட்டளை வழங்கிய நிதியை திரும்ப பெறுவதாக அதன் தலைவர் சுதா மூர்த்தி கூறி இருக்கிறார். மாநில அரசின் செயல்பாடுகளை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அரவிந்த் லிம்பாவளி கூறினார்.

மேலும் செய்திகள்