திருமணம் நடக்காததால் விரக்தி: பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு
திருமணம் நடக்காததால் ஏற்பட்ட விரக்தியில் பட்டதாரி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை செல்வபுரம் அசோக் நகரை சேர்ந்தவர் நல்லகண்ணு. இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் காயத்ரி (வயது 23). எம்.ஏ. தமிழ் படித்து உள்ளார். இவருக்கு பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3½ மணிக்கு காயத்ரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய வீட்டில் இருந்து திடீரென்று புகை வெளியே வந்தது. அத்துடன் காயத்ரி அலறல் சத்தமும் கேட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்று பார்த்தபோது அவருடைய உடலில் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அவர்கள் அந்த தீயை அணைத்து, உடல் கருகிய நிலையில் இருந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
காயத்ரிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த பெற்றோர், பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். அதன்படி பலர் அங்கு வந்து அவரை பெண் பார்த்துவிட்டு சென்று உள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையிலும் ஒரு குடும்பத்தினர் வந்து காயத்ரியை பெண் பார்த்துவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அவரை பிடித்ததா? பிடிக்கவில்லையா? என்றுகூட சொல்லாமல் சென்றுவிட்டனர். இது அவருக்கு மனவேதனை ஏற்படுத்தி உள்ளது.
எனவே திருமணம் நடக்காததால் விரக்தி அடைந்த காயத்ரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.