கால்வாயில் பெண் பிணம்: ‘கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கள்ளக்காதலனே தீர்த்துக்கட்டினார்’

திருவட்டார் அருகே கால்வாயில் பெண் பிணமாக மிதந்தது தொடர்பாக அந்த பெண்ணின் கள்ளக்காதலனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் குளிர்பானத்தில் விஷம் கலந்து கள்ளக்காதலனே தீர்த்துக் கட்டியது தெரிய வந்துள்ளது.

Update: 2018-11-29 22:15 GMT
திருவட்டார்,

குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சேக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லில்லிபாய் (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். லில்லிபாய் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ந் தேதி காலையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மறுநாள் திருவட்டார் அருகே செட்டிசார்விளையில் சிற்றார்பட்டணம் கால்வாயில் லில்லிபாய் உடல் மிதந்தது. இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தன்னுடைய மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் ராஜேந்திரன் போலீசில் கூறினார். இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர்.

போலீசார் முதற்கட்டமாக லில்லிபாயின் செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்த விவரங்களை சேகரிக்க தொடங்கினர். அப்போது, ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து அழைப்பு வந்து வெகுநேரம் பேசியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அந்த செல்போன் எண் யாருடையது? என்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடை நடத்தி வந்த ஒருவருடையது என்பது தெரிய வந்தது. அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது, அந்த நபர் பிணந்தோடு பகுதியில் ஸ்டூடியோ மற்றும் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். அந்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதற்காக லில்லிபாய் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த நபருக்கும், லில்லிபாய்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவருக்கும் திருமணமான நிலையில் ரகசியமாக கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

லில்லிபாய் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அந்த நபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இதற்கிடையே அந்த நபருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அப்போது லில்லிபாய் அடிக்கடி பணம் கொடுத்து உதவி வந்துள்ளார். மேலும் கொடுத்த பணத்தை லில்லிபாய் கேட்க மாட்டார் என்று அந்த நபர் நினைத்து உள்ளார். ஆனால் லில்லிபாய் பணம் விஷயத்தில் கறாராக இருந்துள்ளார். பழக்கவழக்கம் ஒருபக்கம் இருந்தாலும், பணம் கொடுக்கல் வாங்கலில் சரியாக இருக்க வேண்டும் என்று அந்த நபரிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. லில்லிபாயிடம் வாங்கிய பணத்தை அந்த நபரால் திருப்பி கொடுக்க முடியவில்லை.

எனவே லில்லிபாயை கொலை செய்ய அந்த நபர் திட்டமிட்டுள்ளார். கடந்த 19-ந் தேதி லில்லிபாயை அழைத்துக் கொண்டு காரில் வெளியூர் சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி லில்லிபாய்க்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனை அறியாத லில்லிபாயும் அதை வாங்கி குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயக்கம் வருவதாக கூறி தண்ணீர் கேட்டுள்ளார். அப்போதும் லில்லிபாய் உயிர் பிழைத்து விடுவாளோ என்று நினைத்து விஷம் கலந்த தண்ணீரை கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் லில்லிபாய் துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளார்.

பின்னர் திருவட்டார் அருகே செட்டிசார்விளை பகுதியில் கால்வாயில் லில்லிபாய் பிணத்தை வீசியுள்ளார். அதன்பிறகு அந்த நபர் தனது வழக்கமான வேலைகளை கவனிக்க தொடங்கி உள்ளார். ஆனால் போலீசார் லில்லிபாயின் செல்போன் எண் மூலம் துப்பு துலக்கியதில் அந்த நபர் சிக்கினார். இதுதொடர்பாக போலீசார் அந்த நபரையும், அவருடைய நண்பரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளனர். லில்லிபாய் கொலை தொடர்பாக விசாரித்து வரும் நபர்களின் பெயர்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர். ஆனாலும் இன்று அந்த நபர்கள் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்