பேரணாம்பட்டு நகராட்சி முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை முக்கிய ஆவணங்கள் சிக்கின

பேரணாம்பட்டு நகராட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முக்கிய ஆவணங்கள், தஸ்தாவேஜுக்களை கைப்பற்றினர்.

Update: 2018-11-29 23:30 GMT
பேரணாம்பட்டு,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புதுவீதியில் வசித்து வருபவர் முகமதுஆகில் (வயது 60). பேரணாம்பட்டுவை அடுத்த சாத்கர் கிராமத்தைச் சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் பேரணாம்பட்டு கிராமச்சாவடிக்கு வந்து பொதுமக்களுக்கு மனு எழுதி கொடுத்து வருமானம் ஈட்டி வந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் பேரணாம்பட்டு பேரூராட்சியாகவும், பின்னர் நகராட்சியாகவும் மாறிய போது, மொத்தம் 4 முறை கவுன்சிலராகவும், ஒரு முறை பேரூராட்சி துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவருடைய மனைவி நகினாபானு (50). இவர், இரு முறை கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். முகமதுஆகில், தன்னுடைய உறவினர் பெண்ணான சம்சாத்பேகம் பெயரில் நகராட்சி ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்தார்.

டெண்டர் பணிகளை மேற்கொண்டதற்காக அவர், போலி பில்கள் தயாரித்து, பல லட்சம் ரூபாய் முறைகேடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் மதிப்பில் பேரணாம்பட்டு பகுதியிலும், அதனை சுற்றி உள்ள பகுதியிலும், வெளியூரிலும் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதுபற்றி நகராட்சி நிர்வாக ஆணையத்துக்கும், அரசுக்கும் பல முறை புகார்கள் அனுப்பப்பட்டது. எனினும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் சென்னையில் இருந்து 3 கார்களில் 12 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழுவினர் பேரணாம்பட்டு புதுவீதிக்கு வந்து, அங்குள்ள முகமதுஆகில் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அத்துடன் பேரணாம்பட்டு-வி.கோட்டா சாலையில் உள்ள குடோன், வணிக வளாகம், எல்.ஆர்.நகரில் உள்ள வீடுகள், ‘ஐ’ ரோட்டில் உள்ள வணிக வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை இரவு 11 மணிவரை நீடித்தது.

சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், தஸ்தாவேஜுக்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் படி எவ்வாறு சொத்துக்கள் வாங்கப்பட்டது? எனத் துருவி துருவி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முகமதுஆகிலின் நெருங்கிய நண்பரான முன்னாள் நகராட்சி தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான ஆலியார்ஜூவேர் அகமது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்