புதுவை,பாகூர் பகுதியில் பலத்த மழை: 3 வீடுகள் இடிந்து விழுந்தன; விமான சேவைகள் ரத்து
புதுவை, பாகூர் பகுதியில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இதில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புதுச்சேரி,
புதுவையில் நேற்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலை 7 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சிலர் மழையில் நனைந்த படியே சென்றனர். அரசு மற்றும் தனியார் அலுவலகத்திற்கு சென்ற ஊழியர்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்தனர். நேற்று பகல் 12 மணி வரை மழை நீடித்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கிருஷ்ணாநகர், மடுவுபேட், பாவாணர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதுபற்றி தெரியவந்ததும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் அங்கு சென்று மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். மேலும் நேற்று கடலின் சீற்றம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக நேற்று பெங்களூரு, ஐதராபாத்தில் இருந்து புதுவைக்கு வரும் விமானங்களும், புதுவையில் இருந்து செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
நேற்று காலை 8.30 மணியளவில் மழை பெய்தபோது இந்திராகாந்தி சிலை சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், கிழக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரரெட்டி ஆகியோர் அந்த வழியாக வந்தனர். போக்குவரத்து நெரிசலை பார்த்ததும் தங்களது வாகனங்களில் இருந்து இறங்கி மழையில் நனைந்தபடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். உயர் போலீஸ் அதிகாரிகள் மழையில் நனைந்ததை பார்த்ததும் போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு குடைகளை எடுத்துச் சென்றனர். ஆனால் அதை அதிகாரிகள் மறுத்தனர். போக்குவரத்து சீரான பிறகே அங்கிருந்து அவர்கள் சென்றனர்.
புதுவையில் நேற்று காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4.8 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.
பாகூர் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை திடீரென்று பலத்த மழை கொட்டியது. இந்த மழை இரவு வரை விட்டு விட்டு லேசாக பெய்தது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது. சித்தேரி வாய்க்கால், வடிகால் வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் மூலம் பாகூர் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முழுவதும் பெய்த மழையால் பாகூர், கன்னியக்கோவில், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடைகள், மழை கோட் அணிந்தபடியும் சென்றதை காண முடிந்தது. பனையடிக்குப்பம் வையாபுரிநகரை சேர்ந்த ராணி, கரையாம்புத்தூர் பூந்தோட்டம் வீதியை சேர்ந்த சாரதா ஆகியோரின் குடிசை வீடு பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. பனையடிக்குப்பத்தை சேர்ந்த தேவநாதனின் கல்வீட்டின் ஒருபக்க சுவரும் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் வருவாய்த்துறையினர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.