மசாஜ் சென்டருக்கு சென்ற தொழில் அதிபரை தாக்கி நகை, பணம் பறிப்பு 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது
மாதவரத்தில் மசாஜ் சென்டரில் தொழில் அதிபரை தாக்கி நகை, பணத்தை பறித்ததாக 2 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம்,
கொடுங்கையூரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 35). தொழில் அதிபரான இவர், டைல்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். முதுகு தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த அவர், மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள நிர்மலா (29) என்பவரது மசாஜ் சென்டருக்கு கடந்த சில தினங்களாக சென்று வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல மசாஜ் சென்டருக்கு கிருஷ்ணகுமார் சென்றார். அங்கு நிர்மலா மற்றும் அவரது தோழி ஷீலா (25), நண்பர்கள் அருண் (26), லட்சுமணன் (27), மணி (25), கார்த்திக் (26) மற்றும் புகழேந்தி (27) ஆகியோர் இருந்தனர்.
மசாஜ் சென்டரில் ஏன் இத்தனை பேர் கூடியிருக்கிறீர்கள்? என்று கிருஷ்ணகுமார் கேட்டதாக தெரிகிறது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நிர்மலா உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து கிருஷ்ணகுமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 பவுன் நகைகளையும், ரூ.60 ஆயிரத்தையும் பறித்தனர். மேலும் நடந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மசாஜ் சென்டர் உரிமையாளர் நிர்மலா, அவரது தோழி ஷீலா மற்றும் 5 வாலிபர்களையும் கைது செய்தனர்.