கடும் பனிமூட்டத்தால் விபத்து திம்பம் மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டத்தால் விபத்துக்குள்ளான லாரி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-11-29 23:00 GMT
சத்தியமங்கலம், 

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கிரானைட் கற்கள் ஏற்றிய லாரி ஒன்று வந்துகொண்டு இருந்தது. இந்த லாரியை பெரியசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்துகொண்டு இருந்தது.

அப்போது திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம் நிலவியதால் லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் பாய்ந்தது.

பள்ளத்தில் பாய்ந்த லாரி அங்கிருந்த ஒரு மரத்தில் மோதி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. விபத்து நடந்தபோது டிரைவர் வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். மரத்தில் மோதாமல் லாரி பாய்ந்திருந்தால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும். விபத்து ஏற்பட்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், படுகாயம் அடைந்த பெரியசாமியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரியின் பின்பகுதி நடுரோடு வரை தூக்கியபடி இருந்ததால், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்தபடி விடிய-விடிய நின்றன. மேற்கொண்டு எந்த வாகனமும் திம்பம் மலைப்பாதைக்கு வராமல் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் பாய்ந்து நின்ற லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 12 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலமை சீராகி வாகனங்கள் புறப்பட்டு சென்றன.

இதுகுறித்து அந்த வழியாக கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்ற பயணிகள் கூறும்போது, ‘27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கனரக வாகனங்களால் தான் விபத்து ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் இரவு முழுவதும் கடும் பனிப்பொழிவில் மிகவும் அவதிப்பட்டோம். எனவே அதிகாரிகள் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது’ என்றார்கள்.

மேலும் செய்திகள்