சேலம்-கரூர் அகலரெயில்பாதை மின்மயமாகிறது: நாமக்கல்லில் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரம் 20-ந் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு
சேலம்-கரூர் அகல ரெயில்பாதையை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் நாமக்கல்லில் மின்மாற்றி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் முடித்து, டிசம்பர் மாதம் 20-ந் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்,
சேலம்-கரூர் அகலரெயில் பாதை நாமக்கல் வழியாக செல்கிறது. சுமார் 85 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பாதையை மின்மயமாக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வருகிறது.
இதையொட்டி ரெயில் பாதையில் மின்கம்பங்கள் நடப்பட்டு, வயர்கள் இழுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக நாமக்கல் ரெயில் நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த பணி முடிவடையும் நிலையை எட்டி உள்ளது.
இது குறித்து ரெயில்வே பணியாளர்கள் கூறியதாவது:- சேலம்-கரூர் அகலரெயில் பாதை மின்மயமாக்கும் திட்டத்தில் நாமக்கல் ரெயில் நிலையம் அருகே மின்மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான மின்சாரம் சேந்தமங்கலம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இந்த மின்மாற்றியின் முக்கிய பணி 110 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை 25 கிலோ வாட்ஸ் மின்சாரமாக குறைத்து கொடுப்பதே ஆகும்.
தற்போது இப்பணி 90 சதவீதம் முடிவடைந்து உள்ளது. இந்த ஆண்டுக்குள் 100 சதவீதம் நிறைவடையும். இதேபோல் மின்வயர் அமைக்கும் பணியும் 1 கி.மீட்டர் தொலைவு மட்டுமே நிறைவு பெறாமல் உள்ளது. அனைத்து பணிகளையும் வருகிற டிசம்பர் மாதம் 19-ந் தேதிக்குள் முடித்து, 20-ந் தேதி சோதனை ஓட்டத்துக்கு ஏற்பாடு நடந்து வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையொட்டி சேலம்-கரூர் அகலரெயில் பாதையில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரெயில் இயக்கப்படவில்லை. ஆனால் சரக்கு ரெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.