இண்டூர் அருகே 5 வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு
இண்டூர் அருகே, 5 வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி,
இண்டூர் அருகே உள்ள பந்தஅள்ளி பரப்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இவருடைய வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.
நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த அரை பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதேபோல அதே பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவரது வீட்டில் ரூ.33 ஆயிரம் மற்றும் மணி, மகேந்திரன் ஆகியோரது வீடுகளில் இருந்த பாத்திரங்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. மேலும் இண்டூர் – பென்னாகரம் மெயின்ரோட்டில் உள்ள மணிகண்டன் என்பவரது வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டு இருந்தது.
அடுத்தடுத்து 5 இடங்களில் நடந்த இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக இண்டூர் போலீசார் விசாரணை நடத்தினர். சம்பவ இடங்களுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவங்களில் ஒரே கும்பல் ஈடுபட்டதா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.