கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் நவீன வாகனம் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் நவீன வாகனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நெல்லை,
கைதிகளுக்கு காசநோய் கண்டறியும் நவீன வாகனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.
நவீன வாகனம்பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் கிளை சிறைகளில் காசநோய் மற்றும் எய்ட்ஸ் கண்டறியும் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாமில் பரிசோதனை செய்ய நவீன வாகனம் தயார் செய்யப்பட்டு உள்ளது.
அந்த வாகனத்தை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மாநில காசநோய் பிரிவு சார்பில் வழங்கப்பட்ட நவீன வாகனம் மூலம் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு காசநோய் மற்றும் எய்ட்ஸ் கண்டறியும் முகாம் நடக்கிறது. 2 வாரங்கள் தொடர்ந்து இருமல், சளி, மாலை நேரத்தில் காய்ச்சல், மூச்சு திணறல், பசியின்மை, எடை குறைதல் போன்றவைகள் இருந்தால் “ஜீன் எக்ஸ்பெர்ட்“ என்ற நவீன கருவியின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
கிளை சிறைகளில்...பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் கண்டறியப்பட்டு, உடன் சிகிச்சை தொடங்கப்படும். பாளையங்கோட்டை மத்திய சிறையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம், நாங்குநேரி, சங்கரன்கோவில். தென்காசி ஆகிய கிளை சிறைகளில் முகாம் நடத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் மருத்துவ பணிகளின் துணை இயக்குனர் (காசநோய் பிரிவு) சுபைர் ஹசன் முகமதுகான், பாளையங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், சிறைச்சாலை டாக்டர்கள் கைலாஸ், முத்துராஜன், நெஞ்சக நோய் டாக்டர் நடராஜன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய திட்ட மேலாளர் ஜூடு ஜோஸ்வா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மைய மாவட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.