கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் கூச்சல் குழப்பம்
கும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை அமைப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான பேச்சு வார்த்தை கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கெட்டனமல்லி கிராமத்தில் கடந்த 12–ந்தேதி மதுக்கடை திறந்திட ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை அறிந்த அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் சிலர், மேற்கண்ட மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அன்றைய தினமே கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மதுக்கடையை திறக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட்டனர்.
இருப்பினும் கடந்த 17–ந்தேதி மேற்கண்ட மதுக்கடை திறக்கப்பட்டது. அப்போதும் அருகே உள்ள கிராமங்களில் இருந்து வந்த பெண்கள் சிலர் கடையை திறக்க கூடாது என முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து மதுக்கடை மூடப்பட்டது.
அதே சமயத்தில் குடியிருப்புகள் எதுவும் இல்லாத மேற்கண்ட இடத்தில் மதுக்கடையை திறக்க வேண்டும் என ஆண்கள் அங்கு வந்து கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், தங்களது கோரிக்கை தொடர்பாக கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் மனு ஒன்றையும் அவர்கள் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், மதுக்கடை வேண்டாம் என்று போராட்டம் நடத்திய பெண்கள், மதுக்கடையை அமைத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்த ஆண்கள் என இரு தரப்பினருக்கான சமரச பேச்சுவார்த்தை கூட்டம் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது. மண்டல துணை தாசில்தார் உமா சங்கரி முன்னிலை வகித்தார். இதனையொட்டி சிப்காட் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணமூர்த்தி தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்த பேச்சுவார்த்தையின்போது அரசாங்க விதிகளின்படி அமைக்கபட்டு உள்ள மதுக்கடையை திறப்பதால் எந்த வித பிரச்சினையும் ஏற்படாது. மேலும் அந்த பகுதியை இரவு நேரத்தில் கடந்து செல்ல போதிய மின்விளக்குகள் அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தாசில்தார் சுரேஷ் தெரிவித்தார்.
இதனை கேட்ட அங்கு வந்திருந்த பெண்கள், அந்த வழியாக பள்ளி மாணவர்களும், பெண்களும் தினமும் நடந்து செல்வதால் மதுக்கடையை அந்த பகுதியை விட்டு வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்திட வேண்டும் என கோஷம் எழுப்பினர்
இதனைகேட்ட மதுக்கடையை அமைத்திட கோரும் ஆண்கள் தரப்பினர், போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் வேறு கிராமத்தைசேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கூட மதுக்கடையை வைக்க முடியாவிட்டால் வேறு எங்கு வைப்பது? நாங்கள் எங்கு சென்று குடிப்பது? என எதிர் கோஷம் எழுப்பினர். இப்படி இரு தரப்பினர்களும் ஆளுக்கொரு பேச்சாக பேசியவாறு கோஷம் எழுப்பியதால் அங்கு கூச்சல்குழப்பம் நிலவியது.
இதனையடுத்து மதுக்கடை அமைப்பது தொடர்பான சமாதானக்கூட்டத்தை தாசில்தார் சுரேஷ் ஒத்தி வைத்தலீர். இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரு தரப்பு கருத்துகளையும் பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இது தொடர்பாக எந்த ஒரு முடிவையும் அவர் எடுப்பார் என்றும் அதுவரை மதுக்கடை திறக்கப்படாது எனவும் தாசில்தார் உறுதி அளித்தார். இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.