திருச்செந்தூர் கடலோர பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கக்கூடாது; தூத்துக்குடி கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

திருச்செந்தூர் கடலோர பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தூத்துக்குடி கலெக்டருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-11-28 22:30 GMT

மதுரை,

தூத்துக்குடியைச் சேர்ந்த செந்தில்ராஜேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் திருச்செந்தூர் சுப்பிரமணிசுவாமி கோவிலும் உள்ளது. அதிக அலை வீசும் கடலோர பகுதிகளில் திருச்செந்தூரும் ஒன்று. அங்கு கடலோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு எந்த கட்டிடமும் கட்டக்கூடாது.

கோவிலை சுற்றி ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக கட்டிடங்கள் கட்டக்கூடாது என்பது விதி. ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலை சுற்றி, விதிகளை மீறி 9 மீட்டர் உயரத்துக்கும் மேல் அடுக்குமாடி கட்டிடங்களும், கடலோரத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு உள்ளாகவும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தும், எந்த பலனும் இல்லை. அதிக அலை வீசும் கடலோரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடம் கட்டுவது ஆபத்தானது. இயற்கை சீற்றங்களின் போது, பெரும் இழப்புகளை ஏற்படுத்த காரணமாகிவிடும். அதிலும் கோவில் நகரமான திருச்செந்தூர் பகுதியில் இதுபோன்ற விதிமீறல் நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல.

தனியார் கட்டிடங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலக கட்டிடங்களும் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளன. எனவே இதை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஏற்படுத்த வேண்டும். அந்த குழு திருச்செந்தூர் பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். விதி மீறல் கட்டிடங்களை இடிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், திருச்செந்தூர் கடலோர பகுதியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், திருச்செந்தூர் திட்டக்குழும இணை இயக்குனர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 3–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்