ஈரோடு நாச்சியப்பா வீதியில் பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிந்து ஆர்ப்பாட்டம்
ஈரோடு நாச்சியப்பா வீதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ‘மாஸ்க்’ அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்தல், மின்சார புதை கேபிள் அமைத்தல், ஊராட்சிக்கோட்டை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு குழாய் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களின் முக்கிய சாலைகள் தோண்டப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டி மூடப்பட்டு பணிகள் நிறைவடைந்தாலும் சாலை அமைக்கப்படுவதில்லை.
ஈரோடு நாச்சியப்பா வீதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஊட்டி, காங்கேயம், பழனி, வெள்ளாங்கோவில், மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ்களும், நகர பஸ்களும் நாச்சியப்பா வீதி வழியாகவே செல்கின்றன. தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் அடுத்தடுத்து செல்லும் இந்த சாலையில் கடந்த மாதம் வரை பாதாள சாக்கடை அமைத்தல், மின்சார புதை கேபிள் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து முடிந்தன. இதனால் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
தினமும் பஸ்கள் செல்வதால் தற்போது சாலைகள் மிகவும் மோசமாக மாறி வருகிறது. குறிப்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் பெரிய பள்ளங்கள் உருவாகி உள்ளன. இதனால் லேசாக மழை பெய்தாலே அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நின்று, வாகனங்களின் சக்கரங்களில் பதிய வாய்ப்பு உள்ளது. எனவே புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு நாச்சியப்பா வீதியில் நேற்று பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் சாலையோரமாக நின்று முகத்தில் ‘மாஸ்க்’ அணிந்தபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, நாச்சியப்பா வீதியில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
குண்டும், குழியுமான சாலையாக இருப்பதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லவே மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும், அங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. ஓட்டல்கள், பேக்கரிகள், கறிக்கடைகள் என உணவு பொருட்கள் சம்பந்தப்பட்ட கடைகளும் அதிகமாக உள்ளன. சாலையில் பறக்கும் புழுதி உணவு பொருட்களில் படிந்து விடுகிறது. இதனால் பெரும்பாலான கடைகளின் முன்பு நீளமான பிளாஸ்டிக் கவர்கள் தொங்கவிடப்பட்டு உள்ளன.
சாலையை சீரமைக்க எந்தவொரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை. புழுதி பறப்பதை குறைக்க தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலும் பெரிய பள்ளங்கள் உருவாகி இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்கும் வரை நாச்சியப்பா வீதியில் போக்குவரத்துக்கு தடைவிதித்து அனைத்து பஸ்களையும் மேட்டூர் ரோடு வழியாக திருப்பிவிட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.