மணல் குவாரி திறக்கக்கோரி: கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மாடுகளுடன் தொழிலாளர்கள் முற்றுகை

மணல் குவாரி திறக்கக் கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தை மாடுகளுடன் தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-28 22:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் மாட்டு வண்டி மணல் குவாரிகள் மூடப்பட்டதால் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். கட்டுமான தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

இதில் தீர்வு கிடைக்காததால் மணல் குவாரிகளை திறக்கக் கோரியும், மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதை திருட்டு என்று கூறி போலீசாரால் கைது செய்யப்படுவதை கண்டித்தும் வண்டி மற்றும் மாடுகளை கலெக்டரிடம் ஒப்படைக்கப் போவதாக கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம்(சி.ஐ.டி.யு.) அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று அதிகாலை மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வண்டி மற்றும் மாடுகளுடன் கடலூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் முன்பு குண்டுசாலைக்கு வந்தனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர்கள் அணிவகுத்து நின்றனர்.

காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக நுழைவு வாசலில் திரண்டு நின்ற மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் மாடு மற்றும் வண்டிகளை கலெக்டரிடம் ஒப்படைப்பதற்காக அலுவலகத்தின் உள்ளே சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் தொழிலாளர்கள், கலெக்டரை சந்தித்து மாடு மற்றும் வண்டிகளை ஒப்படைத்து விட்டுத்தான் அங்கிருந்து செல்வோம் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட படி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக கலைந்து செல்லாவிட்டால், அனைவரையும் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் திருமுருகன் உள்பட மாட்டு வண்டி தொழிலாளர்கள் 225 பேரை போலீசார் கைது செய்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மேலும் கலெக்டரிடம் ஒப்படைக்க கொண்டு வந்த மாடுகளில் 2-ஐ பிடித்து மினி லாரியில் ஏற்றி ரெட்டிச்சாவடி கீழ்அழிஞ்சிப்பட்டில் உள்ள கோ-சாலையில் ஒப்படைத்தனர். இதைக் கேள்விப்பட்டு மாட்டு வண்டி தொழிலாளர்களின் உறவினர்கள் விரைந்து வந்து மாட்டு வண்டிகளை அங்கிருந்து வீடுகளுக்கு ஓட்டிச்சென்றனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்