திருச்சி விமானநிலையத்தில் 7¾ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் பெண் பயணி உள்பட 5 பேர் சிக்கினர்

திருச்சி விமானநிலையத்தில் 7¾ கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய பெண் பயணி உள்பட 5 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-28 22:45 GMT
செம்பட்டு,

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று காலை 8.45 மணிக்கு ஏர் ஏசியா விமானம் வந்தது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு முன்கூட்டியே ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள் திருச்சி விமானநிலையத்தில் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் சோதனை நடத்தினர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அப்துல் சுபானி, சம்சுதீன் அப்துல்மஜீத், சென்னையை சேர்ந்த அசாருதீன், ஜூமாகான் ஆகியோர் உடைமையில் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்துல் சுபானி, டார்ச் லைட் பேட்டரியில் மறைத்தும், நாணயங்களாகவும் என மொத்தம் 1,396 கிராம் தங்கம் கடத்தி வந்திருந்தார். சம்சுதீன் உடைமையில் தங்க சங்கிலிகளையும், அசாரூதீன் அயர்ன்பாக்சில் தங்கத்தையும் மறைத்து கடத்தி வந்திருந்தனர். இதேபோல ஜூமாகான், ஒட்டப்பயன்படுத்தப்படும் டேப்பில் தங்கத்தை மறைத்து நூதன முறையில் கடத்தி வந்திருந்தார். கடத்தல் தங்கமான இவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல மலேசியாவில் இருந்து நேற்று காலை 9.45 மணிக்கு திருச்சி வந்த தனியார் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளையும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது திருச்சியை சேர்ந்த பெண் பயணி ஜெய்பூனிஷா 8 தங்க வளையல்களையும், சங்கிலியையும் கடத்தி வந்தது தெரிந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கம் கடத்தி வந்த சிக்கிய பெண் பயணி உள்பட 5 பேரிடம் இருந்து மொத்தம் 7 கிலோ 765 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2 கோடியே 30 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர். சிக்கிய 5 பயணிகளிடமும் தங்கம் கடத்தி வந்தது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமானநிலையத்தில் தங்கம் கடத்தி வந்த பயணிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் சி.பி.ஐ.யினரால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். அதன்பின் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வரப்படும் சம்பவம் குறைந்திருந்தது. நாளாக, நாளாக தற்போது மீண்டும் தங்கம் அதிக அளவில் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. மேலும் அதிகாரிகள் சோதனையில் சிக்குவது வழக்கமாகி வருகிறது. திருச்சி விமானநிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஒரே நாளில் 7 கிலோ 765 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்