குடும்ப தகராறில் பரிதாபம்: மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை
குடும்ப தகராறில் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாய் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
போத்தனூர்,
கோவை அருகே உள்ள கே.ஜி.சாவடி கருப்பகவுண்டர் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் எட்டிமடையில் லாரி ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி(வயது 38). இவர்களுக்கு அபிநயா(14), சந்தியா (13) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அபிநயா அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பும், சந்தியா 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
கார்த்திகேயன் நேற்றுமுன்தினம் கணபதியில் உள்ள தனது அண்ணன் பொன்ராஜ் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் விஜயலட்சுமி, சந்தியா ஆகியோர் ஒரு அறையிலும், அபிநயா மற்றொரு அறையிலும் படுத்து தூங்கினர்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் தாய் விஜயலட்சுமி, மகள் சந்தியா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் அரை மயக்கத்தில் கிடந்தனர். இதனை பார்த்த மற்றொரு மகள் அபிநயா அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயலட்சுமி இறந்தார். சந்தியாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கணபதி சென்ற கார்த்திகேயன் இரவு தனது மகளிடம் செல்போனில் பேசி மறுநாள் வீட்டுக்கு வருவதாக கூறி உள்ளார். அதன் பிறகு தான் விஜயலட்சுமி தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார். விஷப்பொருளான சாணிபவுடரை கரைத்து தானும் குடித்து விட்டு, மகளுக்கும் கொடுத்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விஜயலட்சுமி தற்கொலை செய்ய குடும்ப தகராறுதான் காரணம் என்று விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மற்றொரு மகள் அபிநயாவுக்கு விஷத்தை குடிக்க கொடுத்து இருக்கலாம் என்றும், அவர் குடிக்க மறுத்ததால் உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கே.ஜி.சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.