ஊட்டி, கேத்தியில்: வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

ஊட்டி மற்றும் கேத்தியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2018-11-28 22:00 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்ட ஊட்டி நகராட்சி, கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.78½ லட்சம் செலவில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கம்மந்து முதல் கெரடா கிராமம் வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1½ லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை, தொட்டண்ணியில் ரூ.1 லட்சம் செலவில் கட்டப்பட்ட தடுப்புச்சுவருடன் கூடிய நடைபாதை, கேத்தொரை பகுதியில் ரூ.1½ லட்சம் மதிப்பில் குழாய் அமைக்கும் பணி, காந்திநகர், இந்திராநகர், உல்லாடா, அச்சனக்கல், சாந்தூர், பழைய அருவங்காடு, தேனலை கிராமம், சோகத்தொரை, சக்கலட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ.1½ லட்சம் வீதம் மொத்தம் ரூ.13½ லட்சம் செலவில் அமைக்கப்பட்ட 10 மற்றும் 7.5 குதிரை திறன் கொண்ட திறந்தவெளி நீர் இறைக்கும் எந்திரம் ஆகிய பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு கட்டப்பட்டு வரும் கூடம், படகு இல்லத்தில் ரூ.15 லட்சம் செலவில் குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்காக தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்