கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது அமைச்சர் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2018-11-28 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயல் நிவாரணப்பணிகள், மின் வினியோகம் மற்றும் சீரமைப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, வைத்திலிங்கம் எம்.பி., மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கார்த்திக், கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிவாரண உதவிகள் விரைந்து வழங்க...

மின்சாரத்துறையை பொருத்தவரை நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிவாரண பணியில் 4 ஆயிரத்து 212 தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல மீன்வளத்துறை சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தமாதிரியான பணிகள் மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

குறிப்பாக சேதமடைந்த வீடுகளில் தங்கியிருக்கும் மக்களுக்கு தார்ப்பாய் வழங்கும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. குடிசைகள், வீடுகள் இழந்தவர்கள், பாதியளவு வீடு இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகள் விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அனைத்து பணிகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி அமைச்சர்களுடன் இணைந்து அதிகாரிகள் விரைந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது

கேள்வி:-கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுமா?

பதில்:-அதற்கு வாய்ப்பே இல்லை. தேர்வுக்கான புத்தகங்கள் உடனடியாக வழங்கப்பட இருக்கிறது. எனவே அரையாண்டு தேர்வை ரத்து செய்ய இயலாது. ஏனென்றால் தேர்வுகளை பொறுத்தவரை காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என பிரிக்கப்பட்டதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுகளில் அவர்கள் பெறப்படும் மதிப்பெண்களை பொறுத்து அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அவர்களுக்கு மீண்டும் சிறந்த முறையில் ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குறிப்பாக அரையாண்டு தேர்வை நல்ல முறையில் எழுத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிப்பார்கள். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள 84 ஆயிரம் மாணவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் எங்கு வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டாலும், 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க...

கேள்வி:-நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஒத்தி வைக்கப்படுமா?

பதில்:-இதுபற்றி மத்திய அரசு பரிசீலிப்பதாக செய்திகள் வந்து இருக்கிறது. நாங்களும் மத்திய அரசிடம் இதுதொடர்பாக பேசியுள்ளோம். எனவே அந்த பணிகள் 30-ந் தேதிக்குள் மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற மாணவர்களுக்கு என்ன நிவாரண பணிகளை செய்யலாம் என்பதை முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்