சேலம் அருகே லாரிகள் மோதியதில் டிரைவர் பலி கிளனர் உள்பட 2 பேர் காயம்
சேலம் அருகே லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பலி ஆனார். கிளனர் உள்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
கொண்டலாம்பட்டி,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38), லாரி டிரைவர். இவர் திருப்பூரில் இருந்து லாரியில் கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார். இதில் கிளனராக திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த பிரித்விராஜ் (30) இருந்தார்.
இந்த லாரி நேற்று முன்தினம் நள்ளிரவு சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை மகுடஞ்சாவடி அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் திடீரென்று சாலையின் தடுப்பு சுவரை தாண்டிக்கொண்டு மறுபக்க சாலைக்கு லாரி சென்றது. அப்போது அந்த வழியாக திருவள்ளூரில் இருந்து கேரள மாநிலம் கொச்சி நோக்கி ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இதை வேலூர் மாவட்டம் புங்கை நல்லூர் பகுதியை சேர்ந்த உதயன் (26) என்பவர் ஓட்டி வந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் கோழிகளை ஏற்றிச்சென்ற லாரி, கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் இடிபாட்டில் சிக்கி பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் லாரிக்குள்ளேயே டிரைவர் மணிகண்டன் பலியானார். கிளனர் பிரித்விராஜ், கன்டெய்னர் லாரி டிரைவர் உதயன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இதைத்தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் இடிபாட்டில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரித்விராஜ், உதயன் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் சம்பவ இடத்தில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.