வங்கிக்கடன் வாங்கித் தருவதாக கூறி மகளிர் குழுவினரிடம் ரூ.8 லட்சம் மோசடி ; பெண் உள்பட 2 பேர் கைது
வங்கிக்கடன் வாங்கித் தருவதாக கூறி மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களிடம் ரூ.8¼ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தேனி,
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டியன் மனைவி சந்தியா (வயது 27). இவரும், சிலரும் சேர்ந்து மாசாணியம்மன் மகளிர் சுயஉதவிக்குழு என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த தொண்டு நிறுவனம் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடன் வாங்கிக் கொடுப்பதாக கூறி, மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதை நம்பிய மகளிர் குழுவினர் வங்கிக்கடன் பெற முன்வந்துள்ளனர். வங்கிக்கடன் பெறுவதற்கு ரூ.1 லட்சத்துக்கு ரூ.12 ஆயிரமும், ரூ.3 லட்சத்துக்கு ரூ.24 ஆயிரமும் கொடுக்க வேண்டும் என்று சந்தியா உள்ளிட்டோர் கூறியுள்ளனர். இதை நம்பி பலர் பணம் கொடுத்துள்ளனர்.
அந்த வகையில் கம்பம் கக்கன்காலனியை சேர்ந்த நாகராஜ் மனைவி சந்திரா (32) உள்பட 36 பேர் மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரம் கொடுத்துள்ளனர். அத்துடன் அவர்கள் தங்களின் ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவையும் கொடுத்துள்ளனர். ஆனால், கடன் வாங்கிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சந்திரா மற்றும் சிலர் வடபுதுப்பட்டிக்கு சென்று தங்களது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு சந்தியா மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் சந்திரா தலைமையில் மகளிர் குழுவினர் புகார் அளித்தனர்.
அந்த புகார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தியா மற்றும் வாழையாத்துப்பட்டியை சேர்ந்த குமரேசன் (52) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக வடபுதுப்பட்டியை சேர்ந்த கண்ணன், சதீஸ்குமார், குமரேசனின் மனைவி புனிதவதி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.