நாகர்கோவிலில் திருட்டு போன 33 பவுன் நகைகள் மீட்பு; பிரபல கொள்ளையன் கைது

நாகர்கோவிலில் திருட்டு போன 33 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-28 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் டி.வி.டி. காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 62). தேங்காய் வியாபாரி. இவர் வீட்டுக்கு அருகில் சிறிய கடையும் வைத்துள்ளார். கடந்த மாதம் தனது மனைவி உஷாவுடன் பெங்களூருவில் உள்ள மகளை பார்க்க சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த 34 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம், 3 செல்போன்கள், 5 பட்டு சேலைகள் ஆகியவற்றை திருடிச் சென்றான்.

வீடு திரும்பிய போது தான் ஆறுமுகத்துக்கும், அவருடைய மனைவிக்கும் நகை, பணம் உள்ளிட்டவை திருட்டு போனது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கோட்டார் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.


இந்தநிலையில் சப்–இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப்படை போலீசாரிடம் சந்தேகப்படும்படியான வாலிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபர் நாகர்கோவில் அருகே உள்ள சி.டி.எம்.புரத்தில் வசித்து வந்த செல்வன் (34) என்பதும், இவருடைய சொந்த ஊர் சொத்தவிளை என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், வீடு புகுந்து திருடுவதை தொழிலாக செய்து வந்த பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்தது. கடந்த மாதம் டி.வி.டி. காலனியை சேர்ந்த ஆறுமுகம் வீட்டுக்குள் புகுந்து நகை, பணம், செல்போன், பட்டு சேலைகள் ஆகியவற்றை திருடிய வழக்கிலும், நாகர்கோவில் வட்டவிளையை சேர்ந்த தர்ஷினி என்பவர் வீடு புகுந்து 5 பவுன் நகைகளை திருடிய வழக்கிலும், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்குள் புகுந்து ஜீப்புகளில் உள்ள பேட்டரிகள் திருடிய வழக்கிலும், ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு திருட்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.


இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆறுமுகம் வீட்டில் திருடப்பட்ட 34 பவுன் நகைகளில் 28 பவுன் நகைகள், 5 பட்டு சேலைகள், 3 செல்போன்கள் ஆகியவற்றையும், தர்ஷினி வீட்டில் திருடப்பட்ட 5 பவுன் நகைகள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் திருடப்பட்ட 9 பேட்டரிகள் ஆகியவற்றை மீட்டனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட செல்வனை போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்