பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு பயிற்சி

பெண்களுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது தொடர்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்களுக்கு 3 நாள் பயிற்சி வேலூரில் நேற்று தொடங்கியது.

Update: 2018-11-28 23:00 GMT

வேலூர்,

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுகுழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதேபோன்று பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பாலியல் தொந்தரவு காணப்படுகிறது.

இதனை தடுக்க காவல்துறை சார்பில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ‘ஈவ்டீசிங்’ மற்றும் காதல் என்ற பெயரில் தொல்லை கொடுக்கும் நபர்கள் குறித்து புகார் தெரிவிக்க பள்ளி, கல்லூரியில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், மாணவிகள் அளிக்கும் புகார் மனுக்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மாவட்டந் தோறும் பெண்கள் வன்கொடுமை தடுப்புப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாளுவது தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி. வனிதா உத்தரவின்பேரில் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள காவலர் பணியிடை பயிற்சி மையத்தில் 3 நாள் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் பெண் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் 42 பேர் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு காவலர் பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி முன்னிலை வகித்தார்.

இதில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பெறப்படும் புகார்களை வழக்குப்பதிவு செய்வது குறித்தும், அதனை விசாரிப்பது குறித்தும், 18 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டால் அதனை கையாளுவது உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சி நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது. இதில், மாவட்ட நன்னடத்தை அலுவலர் ரமேஷ், ஓய்வுப்பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, வேலூர் மகிளா கோர்ட்டு அரசு வக்கீல் லட்சுமிப்ரியா, ஓய்வுப்பெற்ற தடவியல் நிபுணர் பாரி, ஓய்வுப்பெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டு டோமினிக் சேவியர் உள்பட பலர் பயிற்சி அளிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்