புளியரையில் ஏழு நாட்களாக கழிவுகளுடன் நிற்கும் லாரிகளை கேரளாவுக்கு அனுப்ப நடவடிக்கை
செங்கோட்டை அருகே புளியரையில் 7 நாட்களாக கழிவுகளுடன் நிற்கும் லாரிகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
செங்கோட்டை,
செங்கோட்டை அருகே புளியரையில் 7 நாட்களாக கழிவுகளுடன் நிற்கும் லாரிகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கழிவுகள் ஏற்றி வந்த லாரிகள்
கடந்த 21 மற்றும் 22-ந் தேதி கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கழிவுகள் ஏற்றி வந்ததாக 27 லாரிகளை புளியரை சோதனை சாவடி போலீசார் பிடித்து, சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். அதே போல் நேற்று காலை வரை சுமார் 15 லாரிகளில் கழிவுகள் கொண்டு வந்ததை போலீசார் பிடித்து சுகாதாரத்துறை வசம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த கழிவுகளின் தன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். 27 லாரிகளில் 4 லாரிகளில் மருத்துவ கழிவுகள் இருந்ததால் அந்த லாரிகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் அபராதமும், மீதமுள்ள லாரிகளில் உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட கழிவுகள் கொண்ட 23 லாரிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அவற்றில் 13 லாரிகளின் உரிமையாளர்கள் நேற்று அபராத தொகையை அதிகாரிகளிடம் செலுத்தினர்.
அதனை தொடர்ந்து இன்று அந்த லாரிகளில் உள்ள கழிவுகளை தென்காசி உதவி கலெக்டர் சவுந்திரராஜன், செங்கோட்டை தாசில்தார் வெங்கடாசலம், செங்கோட்டை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரகுபதி, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், செல்வமுருகன் ஆகியோர் போலீசாருடன் இணைந்து சோதனை செய்கின்றனர். பின்னர் அந்த கழிவுகளோடு லாரிகளை கேரளாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்.
டிரைவர்கள் கோரிக்கை
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் எந்த மாதிரியான பொருட்களை லாரிகளில் ஏற்றிச் செல்லலாம், ஏற்றிச் செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு பலகை ஒன்றை தமிழக சோதனை சாவடியான புளியரையில் வைக்க வேண்டும்.
அதே போல் தமிழகத்தில் இருந்து மணல், ஜல்லி, எம்.சாண்ட் போன்ற கனிம வளங்களை எவ்வளவு எடை அளவுடன், லாரிகளில் கேரளாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற விவரங்களுடன் தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும் லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.