லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கஜா’ புயலால் சாய்ந்த வாழைகளை அமைச்சர்கள் ஆய்வு

லால்குடி, மண்ணச்சநல்லூர் பகுதிகளில் ‘கஜா’ புயலால் சாய்ந்த வாழைகளை 2 அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அரசு அறிவித்த இழப்பீட்டு தொகை முறையாக வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Update: 2018-11-27 23:15 GMT
திருச்சி,

கடந்த 16-ந் தேதி கஜா புயலின் கோரத்தாண்டவத்தில் திருச்சி மாவட்டமும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கஜா புயலால் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் பாதிப்புக்குள்ளான வாழை தோட்டங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைத்துறை அமைச்சர் வளர்மதி, திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான ரத்தினவேல், மண்ணச்சநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமேஸ்வரி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி மற்றும் வேளாண் அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

லால்குடி ஒன்றியம் பண்பு அறம்சுற்றி கிராமத்தில் விவசாயி நடராஜன் என்பவர் அரை ஏக்கரில் சாகுபடி செய்திருந்த 500 வாழைகள் கஜா புயலுக்கு சாய்ந்தன. சேதமான வாழைத்தோட்டத்தை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள், விவசாயி நடராஜனிடம் எத்தனை வாழைகள் சாய்ந்தன என்றும், அதிகாரிகள் கணக்கெடுப்புக்கு வந்தார்களா? என்றும் கேட்டறிந்தனர்.

மேலும் பூவாளூர் பகுதியில் விவசாயி வேல்முருகன் 1 ஏக்கரில் பயிரிட்ட, குலைதள்ளிய நிலையில் சில நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் முற்றிலும் புயலுக்கு சேதமாகி கிடந்தது. அடுத்து காட்டூர் ரெயில்வே கேட் அருகில் சிறுமயங்குடி கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன் என்பவரது 1 ஏக்கர் வாழைகள், கோவிந்தன்-இருசம்மாள் தம்பதியின் 2 ஏக்கர் வாழைகள் குலை தள்ளிய நிலையில் சாய்ந்து சேதமானது. அவற்றை பார்வையிட்ட அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர், அரசு அறிவித்த உரிய இழப்பீட்டுத்தொகை முறையாக வழங்கப்படும் என்ற உறுதி அளித்தனர்.

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் நொச்சியம் பகுதியில் மாதவபெருமாள் கோவில் என்ற இடத்தில் விவசாயி குமார் என்பவருக்கு சொந்தமான சேதமான வாழைகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். விவசாயி குமாரிடம், மாவட்ட கலெக்டர் மூலம் உரிய இழப்பீட்டை அரசு வழங்கும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

அப்போது மண்ணச்சநல்லூர் கிராமத்தில் 650 எக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அவற்றில் 117 எக்டேர் அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 669 விவசாயிகளின் வாழைகள் சேதமாகி விட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பின்னர் நொச்சியம் கிராமத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 16-ந் தேதி திருச்சி மாவட்டத்தில் ‘கஜா’ புயல் தாக்கத்தால் 9,397 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. திருவெறும்பூர், மருங்காபுரியை சேர்ந்த 2 பேர் மரணமடைந்துள்ளனர். கால்நடைகளை பொறுத்த அளவில் 16 மாடுகள், 20 ஆடுகள், 4,500 கோழிகள் இறந்துள்ளன. 46 கூரை வீடுகள் முழுமையாகவும், 188 கூரை வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. 3,377 ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. மொத்தம் 3,611 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2,521 எக்டேர் அளவிற்கு வேளாண் பயிர்கள் சேதமடைந்துள்ளன. வாழை மட்டும் 1,648 எக்டேர் அளவுக்கு சேதம் அடைந்துள்ளது, என்றார்.

கலெக்டர் ராஜாமணி கூறுகையில், 196 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. 70 எக்டேரில் பயிடப்பட்டிருந்த கரும்புகள் நாசமாகி விட்டன. மருங்காபுரி பகுதியில் அதிக பரப்பளவில் எலுமிச்சை சேதமாகி இருக்கிறது. மொத்தமாக 2,521 எக்டேர் பரப்பளவில் சேதமாகி உள்ளது. அவற்றில் 1,648 எக்டேர் மட்டும் வாழை சேதமாகி இருக்கிறது. மீதமுள்ள இடங்களில் தென்னை, எலுமிச்சை, மாமரம், கரும்பு, மலர் சாகுபடி என எல்லாமே கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. நெற்பயிர்களை பொறுத்தவரை சேதம் இல்லை. கணக்கெடுக்கும் பணி என்பது முடிந்து விட்டது. தற்போது இழப்பீடு விவரம் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அதாவது, எந்தெந்த பயிருக்கு எவ்வளவு இழப்பீடு என்ற விவரம் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு வருகிறது. ‘கஜா’ புயலுக்கு மாவட்டம் முழுவதும் 6,400 விவசாயிகள் பாதிப்படைந்து இருக்கிறார்கள். 3,611 வீடு இடிந்துள்ளன. மருங்காபுரி பகுதியில் 2 கோழிப்பண்ணை முற்றிலும் அழிந்து விட்டன. கணக்கெடுப்பதிலும், இழப்பீடு பெற்றுத்தருவதிலும் எந்தவொரு விடுதலும் இருக்காது. அதற்கு மாவட்ட நிர்வாகம் உறுதி ஏற்கும், என்றார்.


மேலும் செய்திகள்