ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள் மூலம் கண்காணிப்பு குழு

ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள் மூலம் கண்காணிப்பு குழு அமைக்கப்பட உள்ளது என ஆரணியில் நடந்த விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2018-11-27 22:54 GMT

ஆரணி,

ஆரணி, உதவி வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஆரணி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலை, ஆரணி இந்தியன் வங்கி கிளை மேலாளர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரம் வரவேற்றார்.

ஒவ்வொரு மாதமும் இது போன்ற கூட்டம் நடக்கும்போது 75–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பர். ஆனால் தற்போது நடந்த கூட்டத்தில் 15 விவசாயிகள் மட்டுமே பங்கேற்றனர். இவர்களது குறைகளை கேட்டறிய பல்வேறு துறைகளில் இருந்து 20–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்திருந்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் பேசுகையில், ‘‘விண்ணமங்கலம், மேல்சீசமங்கலம், தச்சூர் உள்ளிட்ட ஆற்றுப்படுக்கைகளில் தினமும் லாரி, டிராக்டர்கள் மூலம் மணல் கொள்ளை நடக்கிறது. நீர்ஆதாரம் குறைந்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதரமும் கேள்விக்குறியாகி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களுக்காக யாரும் குரல் கொடுக்கவில்லை’’ என்றார்.

பதில் அளித்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள் மூலமாக கண்காணிப்பு குழுவை கலெக்டர் அமைக்க உள்ளார். அந்த குழுவில் உறுப்பினராக பங்கேற்க விரும்பும் விவசாயிகள் குறித்த பட்டியலை நீங்களே முடிவு செய்து தரலாம்’’ என்றார்.

மற்றொரு விவசாயி பேசுகையில், ‘‘ஒழுங்குமுறை விற்பனை கமிட்டியில் விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் நடைபெறவில்லை, வியாபாரிகள் தான் போட்டியிடுகிறார்கள் அதனால் விவசாயிகளுக்கு லாபம் இல்லை’’ என்று வேதனை தெரிவித்தார்.

இதற்கு அதிகாரி பதில் அளிக்கையில் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்வதாக கூறினார். இதேபோல் மேலும் பல விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் விவசாயிகள் சாமிநாதன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பலராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்