ஆந்திராவில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் கைது
ஆந்திராவில் பல்வேறு இடங்களில் பூட்டிய வீடுகளில் திருடிய 3 பேர் திருப்பதியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி,
திருப்பதி மற்றும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம கும்பல் திருடுவதாக போலீசாருக்குப் புகார்கள் வந்தன. அதன்பேரில் திருப்பதி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சித்தாரெட்டி ஆலோசனைபடி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிசங்கர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரசூல்சாகிப், பாஸ்கர்ரெட்டி, சரத்சந்திரா, பத்மலதா மற்றும் போலீசார் திருப்பதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பதியை அடுத்த கரகம்பாடி சாலையில் மங்களம் கிராஸ் பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் சந்தேகப்படும் படியாக வந்த 3 பேரை பிடித்துப் போலீசார் விசாரித்தனர். அவர்கள், திருப்பதி சிவஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த தருண், திருப்பதியைச் சேர்ந்த ஷேக்சுல்தான், ஷேக்காஜா எனத் தெரிய வந்தது.
இந்த மூன்று பேரும், கூட்டாளிகளுடன் சேர்ந்து திருப்பதி மற்றும் ஆந்திராவில் நெல்லூர், காவளி, கந்துக்கூர், கலிகிரி, கூடூர் ஆகிய பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு திருடி வந்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.13 லட்சத்து 66 ஆயிரத்து 600 மதிப்புள்ள 50 பவுன் நகைகள், 1300 கிராம் எடையிலான வெள்ளிப்பொருட்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஒரு ஐபேட், 2 கேமராக்கள், 5 கைக்கெடிகாரம், பூட்டுக்களை உடைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருடர்களை பிடித்த போலீசாரை, திருப்பதி புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்புராஜன் பாராட்டினார்.