7 பேரை விடுதலை செய்ய கோரி நடக்கும்: ம.தி.மு.க. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு- முத்தரசன் பேட்டி
7 பேரை விடுதலை செய்ய கோரி நடக்கும் ம.தி.மு.க.வின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவிப்பதாக மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாக குழு சேகர் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அன்பழகன், நகர செயலாளர் தமிமுன்அன்சாரி, மாவட்ட குழு குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் முத்தரசன், மாநில நிர்வாககுழு உறுப்பினர் மணிவாசகம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினர்.
கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். கஜா புயலுக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ள ரூ.15 ஆயிரம் கோடியை தாமதமின்றி வழங்கிட வேண்டும். இடைக்கால இழப்பீட்டை சரிசெய்ய ரூ.1500 கோடி வழங்குதல், டெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க அனைத்து நகரங்கள், கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது, கடலூர் மாவட்ட கலெக்டரை அடிக்கடி மாற்றி நிர்வாகத்தை முடக்குவதை கண்டித்தும், சிதம்பரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
கஜா புயலால் தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் கூரை, ஓட்டு வீடு, சாகுபடி நிலங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்புகளை முழுமையாக கணக்கெடுப்பு செய்து பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நிவாரணம் கொடுக்கவேண்டும். கடந்த ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை இதுவரை விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதை அரசு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் இதுவரையில் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் கோவை வேளாண் பல் கலைக்கழக 3 மாணவிகள் பஸ்சில் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது கண்டனத்திற்கு உரியதாகும். இந்த நிலையில் 7 பேரை விடுதலை செய்ய கோரி, வருகிற 3-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு தெரிவிப்பதுடன், நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.