கஜா புயலால் வீடுகளை இழந்தவர்கள் மாட்டு வண்டியில் கொசுவலையை கட்டி தூங்கும் அவலம்

அதிராம்பட்டினம் அருகே கஜா புயலால் வீடுகளை இழந்தவர்கள் மாட்டு வண்டியில் கொசுவலையை கட்டி தூங்குகிறார்கள்.

Update: 2018-11-27 22:26 GMT
அதிராம்பட்டினம்,

கஜா புயலால் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மதுக்கூர், சேதுபாவாசத்திரம், ஒரத்தநாடு, ஊராணிபுரம் பகுதியில் இருந்த ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்தன. வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்தன. இதனால் இப்பகுதியில் மின்வினியோகம் பாதிக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். சிலர் அருகே உள்ள கோவில்கள் மற்றும் பள்ளி கட்டிடங்களில் தங்கி உள்ளனர். ஒரு சிலர் தூங்க இடமில்லாமல் மாட்டு வண்டியின் மேல் கொசுவலையை கூடாரம் போல கட்டி அதற்குள் படுத்து தூங்குகின்றனர். தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இவ்வாறு படுத்து தூங்கும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இது குறித்து வீடுகளை இழந்த மக்கள் கூறியதாவது:- இடிந்து விழுந்த வீடுகளை சீரமைக்க எங்களிடம் பணம் இல்லை. இதனால் நாங்கள் வீதியில் படுத்து தூங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த புயலால் வீதிக்கு வந்து விட்டோம். வெட்ட வெளியில் கொட்டும் பனியில் தூங்குவதால் அவதிப்படுகிறோம். எனவே காலம் தாழ்த்தாமல் உடனடியாக புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்