ஈரோட்டில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனை நடைமேடை நீட்டிப்பு பணி; சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் ஆய்வு
ஈரோட்டில் ரெயில் பெட்டி பராமரிப்பு பணிமனையின் நடைமேடை நீட்டிப்பு பணியை சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் ஆய்வு செய்தார்.
ஈரோடு,
ஈரோடு ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளின் பராமரிப்பு பணிமனை உள்ளது. அங்கு ரெயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டு சுத்தம் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஈரோட்டில் இருந்து சென்னை மார்க்கமாக இயக்கப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் அந்த பணிமனையில் நிறுத்தி தினமும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிமனையின் நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால் 17 ரெயில் பெட்டிகளை மட்டுமே சுத்தம் செய்ய முடியும். எனவே நடைமேடையை நீட்டிப்பு செய்ய ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் ரெயில் பெட்டிகளின் பராமரிப்பு பணிமனையை சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் பெட்டிகளை பராமரிக்க நடைமேடையை நீட்டிப்பு செய்யப்பட வேண்டிய நீளம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மொத்தம் 24 பெட்டிகள் உள்ளன. ஆனால் பணிமனையில் 17 பெட்டிகளை மட்டுமே நிறுத்தி பராமரிப்பு செய்ய முடியும். எனவே பணிமனையை மொத்தம் 600 மீட்டர் நீளத்தில் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 400 மீட்டர் நீளத்தில் நடைமேடை உள்ளது. கூடுதலாக 200 மீட்டர் நீட்டிப்பு செய்வதற்கான பணி தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ரூ.45 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது’’, என்றார்.