எதிர்க்கட்சிகள் அமளி மேல்-சபை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மராட்டிய மேல்-சபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே, பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
மும்பை,
அரசு அறிவித்த ரூ.34 ஆயிரத்து 500 நிவாரண தொகையை முழுமையாக பெற்ற ஒரு விவசாயியை காட்டினால் கூட தனது பதவியை ராஜினாமா செய்வதாக சவால் விடுத்தார்.
மேலும் மராத்தா இடஒதுக்கீடு குறித்து பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் வழங்கிய அறிக்கையை தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து சந்திரகாந்த் பாட்டீல் கூறுகையில், “விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.3 ஆயிரத்து 360 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பயிர் காப்பீடு நிறுவனங்களிடம் ரூ.1,100 கோடி இழப்பீடு வழங்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மராத்தா சமுதாயத்தினர் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் கமிட்டி கொடுத்த பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்வதற்கு முன்பு சபையில் தாக்கல் செய்வோம்.
சிறப்பு பிரிவின் கீழ் மராத்தா சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதை சிலர் விரும்பவில்லை” என்றார்.
இவரின் பேச்சால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆளும் கட்சியினரும் எதிர்கட்சிகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.