கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தம் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-11-27 22:45 GMT
புதுக்கோட்டை,

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கஜா புயலின் தாக்கத்தால் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வரலாற்றில் இல்லாத அளவு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த புயலில் தென்னை, மா, தேக்கு போன்ற மரங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளது. தென்னையை நம்பியுள்ள விவசாய குடும்பங்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த ஒரு தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். குறைந்த பட்சமாக ரூ.5 ஆயிரம் வீதமாவது கணக்கிட்டு நிவாரணம் தர வேண்டும். பாதிக்கப்பட்ட பல இடங்களில் குடிநீர் உணவு சரியாக போய் சேரவில்லை. அதேபோல் கடற்கரையில் உள்ள மீனவ படகுகள் குறைந்தபட்சம் ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான மதிப்புடையது. எனவே சேதமடைந்த படகுகளுக்கான கடன் தொகையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். விவசாய, கல்வி கடன்களையும் ரத்து செய்ய வேண்டும்.

மத்திய அரசு தேசிய பேரிடர் நிதியில் இருந்து முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் மந்தமாக உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கைது செய்வது அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. புயல் பாதித்த பகுதிகளை பிரதமரோ அல்லது மத்திய அமைச்சரோ பார்வையிட வராதது வருத்தமளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அறக்கட்டளையின் சார்பில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்.

நடக்க இருக்கும் 5 மாநில தேர்தல் முடிவு காங்கிரசுக்கு சாதகமாக இருக்கும். தற்போது மோடியின் எதிர்ப்பு அலை வீசுகிறது. நடந்து முடிந்த 15 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் மூன்று இடங்களை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது. தற்போது ராகுல் அலை வீசுகிறது. எனவே 5 மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், துரை திவ்யநாதன், பெனட் அந்தோணி உள்பட பலர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்