தரமற்ற விதைகளை விற்பனை செய்த 37 வியாபாரிகள் மீது நடவடிக்கை
தரமற்ற விதைகளை விற்பனை செய்த 37 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
தரமற்ற விதைகளை விற்பனை செய்த 37 வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
37 பேர் மீது நடவடிக்கை
நெல்லை மாவட்டத்தில் தற்போது பிசான நெல் சாகுபடி தொடங்கிய நிலையில் நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் டேவிட் டென்னிசன் தலைமையில் விதை விற்பனை நிலையங்களிலும் திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது தொடர் ஆய்வுகள் மூலம் விதை விற்பனை நிலையங்களில் விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வறிக்கை பெறப்பட்டு குறைபாடு உள்ள நெல், மக்காச்சோளம், பருத்தி, தக்காளி, தீவனச்சோளம் உள்ளிட்ட பயிர் விதைகளை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி ரூ.22 லட்சத்து 4 ஆயிரத்து 500 மதிப்பிலான 37.471 மெட்ரிக் டன் விதைகளுக்கு விற்பனை தடை ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 37 வியாபாரிகள் மீது கோர்ட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
எச்சரிக்கை
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உரிமம் பெற்று விதை விற்பனை செய்து வரும் வியாபாரிகள், காலாவதியான விதைகளை இருப்பு வைத்து விற்பனை செய்தல், குறைபாடு உள்ள விதைகள் மற்றும் தடை செய்யப்பட்ட விதைகள் விற்பனை செய்தல், ஆதாரமற்ற விதைகளை இருப்பு வைத்து விற்பனை செய்வது, வெளி மாநில விதைகளை படிவம்–2 இல்லாமல் விற்பனை செய்வது மற்றும் உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
விவசாயிகளும் தங்களுக்கு தேவையான நெல் ரக விதைகளை உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். அவ்வாறு விதைகளை வாங்கும் போது அதற்குரிய ரசீதுகளை கண்டிப்பாக கேட்டு வாங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.