கிராம பகுதியில் கடைகள் அடைப்பு; தனியார் பஸ்கள் ஓடவில்லை

முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி புதுவை கிராமப்புறங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள் ஓடவில்லை.

Update: 2018-11-27 00:01 GMT

வில்லியனூர்,

சபரிமலை புனிதத்தை பாதுகாக்கக்கோரியும், பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை விலக்க வலியுறுத்தி புதுச்சேரி மாநில பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையொட்டி புதுவை பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

கிராமப்புறங்களான வில்லியனூர், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் பகுதியிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. அரசு பஸ்கள் ஓடிய நிலையில், தனியார் பஸ்களும் ஓடவில்லை. சினிமா தியேட்டரில் பகல் காட்சிகள் நடைபெறவில்லை.

இந்த நிலையில் பா.ஜ.க. வில்லியனூர் மாவட்டத்தலைவர் மோகன்குமார் தலைமையில் மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஆனந்த், தொழிற்சங்க அணி தலைவர் புகழேந்தி உள்பட 10 பேர் புதுவை கடைவீதி, புறவழிச்சாலையில் உள்ள கடைகளை அடைக்க வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். அவர்களை வில்லியனூர் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் திருபுவனை, மதகடிப்பட்டு, திருவண்டார்கோவில் பகுதியிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. புதுவை மாநிலத்தை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடவில்லை. ஆனால் தமிழக அரசு பஸ்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஓடின. விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த தனியார் பஸ்கள் மாநில எல்லையான மதகடிப்பட்டு வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி சென்றனர்.

தவளக்குப்பம் பகுதியில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஆனால் பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், அரியாங்குப்பம், காலாப்பட்டு, திருக்கனூரில் பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. ஒரு சில கடைகள் மட்டுமே மூடியிருந்தன. இந்த கடைகளும் மதியத்துக்குமேல் திறக்கப்பட்டன. புதுவை – கடலூர், புதுவை – மரக்காணம், திண்டிவனம் ஆகிய வழித்தடத்தில் தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

தமிழக பகுதியில் இருந்து வந்த தனியார் பஸ்கள் மாநில எல்லை வரை வந்து பயணிகளை இறக்கிவிட்டுச்சென்றது. அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் கிராமப்புறங்களுக்கு பயணிகள் சென்றனர். இதனால் ஷேர் ஆட்டோக்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது.

முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த சிலரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவே போலீசார் கைது செய்தனர். அவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்