சாத்தியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2018-11-26 23:01 GMT
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே பாலமேடு செல்லும் வழியில் சாத்தியாறு அணை உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 29 அடி. ஆனால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 11 அடியாகவே இருந்தது. இந்த அணை மற்றும் நீர்வரத்து பகுதிகளில் கஜா புயல் காரணமாக பெய்த மழையால் ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 26 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த அணை 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நிரம்பியுள்ளது. இதனால் அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த சாத்தியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். அதன்படி நேற்று சாத்தியாறு அணையின் முதல் மதகில் இருந்து மாவட்ட கலெக்டர் நடராஜன் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் செந்தில்குமார், வாடிப்பட்டி தாசில்தார் பார்த்தீபன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய தலைவர் ராம்குமார், விவசாய சங்கத்தினர் மற்றும் பாசன விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 20 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. தற்போது மழை இல்லாத காரணத்தால் நீர்வரத்து மிக குறைவாகவே உள்ளது. இந்த அணையின் நீரால் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன்மூலம் கீழசின்னணம்பட்டி, எர்ரம்பட்டி, அய்யூர், சுக்காம்பட்டி உள்பட 10 கிராம கண்மாய் விவசாயிகளும் பயனடைவார்கள்.

மேலும் செய்திகள்