லட்சுமியாபுரம்–நூர்சாகிபுரம் இடையே பஸ் செல்லும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்; கலெக்டரிடம், கிராம மக்கள் மனு
ஸ்ரீவில்லிபுத்தூர்–ஆலங்குளம் வழித்தடத்தில் லட்சுமியாபுரம்–நூர்சாகிபுரம் இடையே பஸ்கள் சென்று வரும் வகையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
நூர்சாகிபுரம், இடையபொட்டல்பட்டி, துலுக்கன்குளம் ஆகிய கிராம மக்கள் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சியின் போது கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
ஸ்ரீவில்லிபுத்தூர்–ஆலங்குளம் வழித்தடத்தில் லட்சுமியாபுரம்–நூர்சாகிபுரம் இடையே ரெயில் பாதை செல்கிறது. இந்த ரெயில்பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழியாக அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் சென்று வருகின்றன. கிராம மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் இந்த பாதை வழியாகத்தான் சென்று வர வேண்டும்.
தற்போது அமைக்கப்பட்டு வரும் சுரங்கப்பாதை பஸ்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளன. இதனால் லட்சுமியாபுரம், நூர்சாகிபுரம், துலுக்கன்குளம், கங்காகுளம், பாலசுப்பிரமணியபுரம், அழகுதேவேந்திரபுரம், இடையபொட்டல்பட்டி, சன்னார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாத நிலை ஏற்படும்.
தற்போது உள்ள சுரங்கப்பாதை 12 அடி உயரத்தில் கட்டப்படுகிறது. 13 அடி உயரம் இருந்தால் தான் பஸ்கள் சென்று வர முடியும். எனவே இந்த சுரங்கப்பாதையை 13 அடி உயரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.