பெண்ணாடம் அருகே: சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் 4-வது நாளாக போராட்டம்

பெண்ணாடம் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் நேற்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-26 21:45 GMT
பெண்ணாடம்.

பெண்ணாடம் அடுத்த இறையூரில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஆலை நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் கடந்த 23-ந்தேதி முதல் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் கடந்த 24-ந்தேதி ஆலை வளாகத்திலேயே சமையல் செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் தொழிலாளர்களுடன் ஆலை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இவர்களது போராட்டம் நேற்று 4-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் நேற்று ஆலையின் பொது மேலாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், 2017-18-ம் ஆண்டு போனஸ் மற்றும் சேமிப்பு தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ஆலைவளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்