புதுச்சத்திரம் அருகே: கல்லால் தாக்கி முதியவர் கொலை - அண்ணன்-தம்பி கைது
புதுச்சத்திரம் அருகே கல்லால் தாக்கி முதியவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை,
புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியப்பட்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் அய்யாறு(வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர்கள் கலியபெருமாள் மகன்கள் தண்டபாணி(50), ராமச்சந்திரன்(49).
அண்ணன்-தம்பியான தண்டபாணியும், ராமச்சந்திரனும் நேற்று முன்தினம் மாலை தங்களது வீட்டு முன்பு நின்று சண்டை போட்டுக்கொண்டிருந்தனர். இதை பார்த்த அய்யாறு அவர்களது சண்டையை விலக்கி விட சென்றார். அப்போது அய்யாறுவை தண்டபாணியும், ராமச்சந்திரனும் ஆபாசமாக திட்டினர். மேலும் அருகில் கிடந்த கல்லால் அவரை சரமாரியாக தாக்கினர்.
இதில் அய்யாறு பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அய்யாறு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அய்யாறுவின் மகன் ஜெய்சங்கர் புதுச்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, தண்டபாணி, ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.