கஜா புயல் தாக்கிய போது கடல் நீர் புகுந்தது: இடுப்பளவு சகதி நிறைந்த புஷ்பவனம் கிராமம் மக்கள் அவதி
கஜா புயல் தாக்கியபோது கடல் நீர் புகுந்ததால் புஷ்பவனம் கிராமத்தில் இடுப்பளவு சகதி நிறைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் அவதிபட்டு வருகிறார்கள்.
தஞ்சாவூர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது புஷ்பவனம் கிராமம். இந்த கிராமத்தில் மீனவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கிய போதும் இந்த கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியபோது இந்த கிராமத்தில் கடல் நீர் புகுந்தது. கடலிலிருந்து சுமார் ½ கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் புகுந்தது.
இதனால் கடல் நீர் புகுந்த இடம் வரை சகதியாக காட்சியளிக்கிறது. குறிப்பாக கடலில் இருந்து 200 மீட்டர் தூரம் வரை இடுப்பளவுக்கு சகதி நிறைந்துள்ளது. இதில் மீனவர்களின் படகுகள், வலைகள் போன்றவை சிக்கி சேதமடைந்துள்ளது.
இடுப்பளவிற்கு சகதி இருப்பதால் மீனவர்கள் யாரும் படகு அருகில் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதைப்போல சகதி நிறைந்து காணப்படுகிறது.
இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த சகதியை அப்புறப்படுத்தினால் தான் நாங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும். தற்போது இந்த பகுதி மக்கள் கடலுக்கு கூட செல்ல முடியாத அளவுக்கு புஷ்பவனம் பகுதியில் சகதி நிறைந்துள்ளது.
மேலும் சுனாமியால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகளும் இந்த புயலுக்கு சேதமடைந்துள்ளது. சுனாமியை விட தற்போது நாங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளோம். எனவே அதிகாரிகள் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.