‘கஜா’ புயலின் தாக்கத்தால்: குலை தள்ளிய 6 ஆயிரம் வாழைகளை இழந்து தவிக்கும் விவசாயி - வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என வேதனை

‘கஜா’ புயலின் தாக்கத்தால் குலை தள்ளிய 6 ஆயிரம் வாழைகளை இழந்து தவிக்கும் விவசாயி ஒருவர், வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என வேதனையுடன் தெரிவித்தார்.

Update: 2018-11-26 21:45 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆலங்காடு கிராமப்பகுதியில் தென்னை, வாழை, சவுக்கு உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.
சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அவை வேரோடு சாய்ந்து நாசமானது. இதனால், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்தவை புயலுக்கு சேதமாகி விட்ட கவலையில் தவித்து வருகிறார்கள்.

ஆலங்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்ற விவசாயி கூறியதாவது:-

எனக்கு சொந்தமான நிலத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தேன். அவற்றுக்கு கிணற்று பாசனம் மூலம் நல்ல உரம் போட்டு பராமரித்து வளர்த்தேன்.

9 மாதமாக வளர்ந்த நிலையில் அனைத்து வாழைகளும் குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தது. குலை தள்ளிய வாழைகள் காற்றுக்கு சாய்ந்து விடாமல் தடுக்கும் வகையில் சவுக்கு கம்புகளை பொருத்தி தாங்கி பிடித்தவாறு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட புயலின் தாக்கத்துக்கு குலை தள்ளிய 6 ஆயிரம் வாழைகள் முற்றிலும் சாய்ந்து நாசமாகி விட்டது. வாழை சாகுபடிக்காக கடன் வாங்கி இருந்தேன். இனி வாங்கிய கடனை எப்படி அடைக்க போகிறேன் என தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி அகஸ்டின் ஆரோக்கியராஜ் கூறுகையில்,“ 2 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருந்தேன். அவற்றில் 1,500 வாழைகளை வட்டிக்கு கடன் வாங்கி பராமரித்தேன். இந்த நிலையில் புயலால் அவை சாய்ந்து விட்டன. மேலும் 200 தென்னை மரங்களும், 1½ ஏக்கர் சவுக்கு மரங்களும் புயலுக்கு சாய்ந்து விட்டன. தற்போது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறேன். எனவே, அரசு நிவாரண உதவியினை மொத்தமாக வழங்கினால்தான் எதுவும் செய்ய முடியும். புயலுக்கு வாழை, தென்னை மரங்கள் நாசமாகி விட்டதால், யாரிடம் கடன் கேட்டாலும் தர மறுக்கிறார்கள்” என்றார்.

மேலும் ஆலங்காடு பகுதியில் பல வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து விட்டன. வீட்டு சுவர்கள் மழையால் நனைந்து இடிந்தும் விட்டன. அப்பகுதியில் வீட்டை இழந்த அன்னக்கிளி கூறியதாவது:-

எனக்கு ஒரு மகன் இருக்கிறான். கணவர் இறந்த பின்பு தந்தைக்கு சொந்தமான வீட்டில் மகனுடன் வசித்து வந்தேன். கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தேன். தற்போது ஏற்பட்ட புயலுக்கு வீடு இடிந்து சேதமாகி விட்டது. வீட்டில் குடியிருக்க முடியவில்லை என்பதால், அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறேன். அரசு வழங்கும் நிவாரண உதவியை கொண்டு என்னால் இடிந்த வீட்டை பராமரிக்க முடியாது. எனவே, சொந்தமாக அரசே வீடு கட்டி தர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்