சேலம் கோர்ட்டு வளாகத்தில் சொத்து தகராறில் அண்ணன், தம்பிகள் இடையே மோதல் வாலிபரின் விரலை உறவினர் கடித்து துப்பியதால் பரபரப்பு
சேலம் கோர்ட்டு வளாகத்தில் சொத்து தகராறில் அண்ணன், தம்பிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது, வாலிபரின் கை விரலை அவரது உறவினர் ஒருவர் கடித்து துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாமிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. இவருக்கு தங்கவேல் (வயது 66), அய்யனார் (64), பரமேஸ்வரன் (56) ஆகிய 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு பூர்வீக சொத்தாக 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த சொத்தை பிரிப்பது தொடர்பாக தங்கவேல் மற்றும் அவரது சகோதரர்களுக்கு இடையே தகராறு இருந்து வருகிறது. இந்த வழக்கு ஓமலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தங்கவேல் மகன் சக்கரவர்த்தி (37) என்பவர், சொத்து தகராறில் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வக்கீல் மூலம் சேலம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மக்கள் நீதிமன்றம் மூலம் சமரசம் செய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அந்த வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், நேற்று தங்கவேல், இவரது தம்பி அய்யனார் தரப்பினரும், மற்றொரு தரப்பில் பரமேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினரும் சேலம் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்களது வழக்கு விசாரணை வருகிற 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராகி கொண்டிருந்தனர்.
அப்போது, கோர்ட்டு வளாகத்தில் நீதி தேவதை சிலை அருகே வந்தபோது, தங்கவேல், அய்யனார் தரப்பினருக்கும், பரமேஸ்வரன் தரப்பினருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர், ஒருவரை ஒருவர் கடுமையாக அடித்து மோதிக்கொண்டனர். மேலும், அப்பகுதியில் கீழே கிடந்த மரக்கிளைகளை எடுத்து தாக்கினர். இந்த மோதலில் தங்கவேல், அய்யனார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், தங்கவேலுவின் மூத்த மகன் சக்கரவர்த்தியும் காயம் அடைந்தார்.
இது ஒருபுறம் இருக்க, தங்கவேலுவின் இளைய மகன் சுரேசின் கை விரலை அவரது உறவினர் ஒருவர் திடீரென வாயால் கடித்து துப்பினார். இதனால் அவரது விரலில் ரத்தம் வடிந்ததால் வலியால் அலறி துடித்தார். இதைப் பார்த்து தங்கவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கோர்ட்டுக்கு வந்தவர்கள் அங்கு திரண்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து படுகாயம் அடைந்த சுரேஷ், தங்கவேல், அய்யனார் ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் அய்யனார், ஓய்வுபெற்ற கோர்ட்டு ஊழியர் ஆவார். சேலம் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பரமேஸ்வரன், கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.
இந்த மோதல் சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணன், தம்பிகள் இடையே மோதல் நடந்ததும், அப்போது, வாலிபரின் விரலை உறவினர் ஒருவர் கடித்து துப்பியதும் சேலம் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.