சந்திரகிரி அருகே கள்ளகாதல் விவகாரத்தில் பெண் அடித்துக்கொலை

சந்திரகிரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதலனை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-11-26 22:30 GMT

ஸ்ரீகாளஹஸ்தி, 

சந்திரகிரி மண்டலம் மல்லய்யகாரிப்பள்ளியைச் சேர்ந்தவர் செஞ்சுமணி (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி கிரிஜா (35). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கிரிஜாவுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த முனுசாமியின் மகன் கிரி என்பவருக்கும் 5 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்தது. கிரிஜா, கிரியிடம் அடிக்கடி பணம் கேட்டு துன்புறுத்தி வந்தார்.

13–ந்தேதி கிரிஜாவை கிராமத்துக்கு அருகில் கிரி வரவழைத்தார். அங்கு வந்த கிரிஜா, கிரியிடம் வழக்கம்போல் பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கிரி, இரும்புக்கம்பியால் கிரிஜாவை அடித்துக் கொலை செய்தார். அவரின் பிணத்தை ஒரு கோணிப்பையில் போட்டு கட்டி, கிராமத்துக்கு அருகே பாழடைந்த ஒரு விவசாய கிணற்றில் வீசி விட்டார்.

கிரிஜாவை காணாதது கண்டு அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், அவரை காணவில்லை. கிரிஜாவை காணவில்லை என 24–ந்தேதி சந்திரகிரி போலீசில் செஞ்சுமணி புகார் செய்தார். பெண் மாயம் என, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாயமான கிரிஜாவை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கிரி நேற்று முன்தினம் சந்திரகிரி கிராம வருவாய்த்துறை அதிகாரி முனுசாமி முன்னிலையில் சரண் அடைந்தார். தான் இரும்புக் கம்பியால் அடித்து கிரிஜாவை கொலை செய்து விட்டதாக கூறினார். கிராம வருவாய்த்துறை அதிகாரி முனுசாமி, கிரியை அழைத்துச் சென்று சந்திரகிரி போலீசாரிடம் ஒப்படைத்தார். கிரியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று கிரிஜாவின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்காக பதிவு செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரய்யா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்